Saturday, May 14, 2016




                                உலக வங்கி 


May 1983: Prince George's County, Maryland,USA:

என் Brother in law:ஏய் 
, நாளைக்கு என்ன Program உனக்கு?

WORLD BANK, IMF போகலாம்னு நினைக்கிறேன்

Ok, எங்க இருக்குன்னு தெரியுமோல்யோ? சரி, அப்ப கார்த்தால 6 மணிக்கெல்லாம் ready ஆயிடு. உன்னை Metro Rail station ல இறக்கிவிட்டுட்டு நான் அப்படியே Motorola போறேன்.
             
மனதிற்குள் ஏக உற்சாகம். 

1972ல் Professor Jagaraj தினந்தோறும் 'Banking, Currency, International Trade, and Public Finance' வகுப்பை 'The Miiiiiiiiighty Dollar' என்றுதான் ஆரம்பிப்பார். Syllabus என்னவென்று கவலைப்படாமல் international tradeல் என்னென்ன நடக்கிறது என்பதை அந்த 45 நிமிட வகுப்புகளில் தன்னையே மறந்த நிலையில் விரிவாக்கம் செய்வார்.

உலகப் போர், .நா, Bretton Woods Conference, IMFன் ஸ்தாபிதம், Gold Standardன் வீழ்ச்சி, Sterling Poundன் தளர்ச்சி, US dollar எப்படி Mighty Dollar ஆனது என்பதின் பரிணாம வளர்ச்சி என பல விக்ஷயங்களில் சஞ்சரித்து அன்றன்றைய தினங்களில் உலகப் பொருளாதார நிலமை என்ன என்பதனை கோடிட்டுக் காட்டிவிட்டு தன் அன்றைய lecture, Japanese Yen எப்படி அந்த mighty dollarஐ ஆட்டம் காண வைக்கிறது என ஆரம்பித்து, முடித்துக் கொள்வார்.

அவர் Monetary theoryயும், practiceஉம் சுவைபட கற்பித்ததில் நான் Adarsh Vidyalaya வாசலில் என் நண்பனுடன் நின்று sight அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.

Purchasing power parity theoryயும், Bretton Woods conferenceல் வரையறுக்கப்பட்ட IMF ஸ்தாபிதம், அதற்கான கோடபாட்டுகள், Balance of Payments, GNP கணக்கீடுகள், Lender of Last Resort..Central Banks Roles, Foreign Exchange regulations, money laundering என எனக்குப்பிடித்த பல Macro Economics concepts/theory அனைத்தையும் அசைபோட்டுக்கொண்டேன். IMF visitற்காக Finance Secretary அளவிற்கு ஏக preparation. விரல் நுனியில் statstics.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு காபி குடித்துவிட்டு, மானசீகமாக விபூதி இட்டுக்கொண்டு, கையில் புது மணம்கமிழும் MBA degreeயுடன் அண்ணன் கோயில் ஶ்ரீநிவாசரையும், அலர்மேல் மங்கைத்தாயாரையும் நினைவு கூர்ந்து பாஸ்கருடன் அவரது காரில் பயணிக்க ஆயத்தமானேன்.

IMF 04:

Metro stationல் இறக்கிவிட்டார். Foggy Bottom station என நினைக்கிறேன். வானளாவிய பல Federal கட்டிடங்கள் தமக்கே உரித்தான பிரும்மாண்டமும், கண்டிப்பும் பறைசாற்றிக்கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தன. தங்கமுலாம்பூசிய பெயர்ப்பலகையுடன் நெருங்க விடாத , நட்பு பாராட்டாத அந்த concrete கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடை பின்னியது. அந்த வெயில் காலத்திலும் உடல் நடுங்கியது. தெனாலி கமலஹாஸன் போல் பயம் பற்றிக்கொண்டது. சென்னை consulateல் IMFல் வேலை தேடுவேன் என்று சொல்லி விசா நிராகரிக்கப்பட்டது நினைவுக்கு வந்தது. அந்த consulate officerஐ மானசீகமாக நினைத்து 'பார், என் இலக்கை நெருங்கிவிட்டேன்' என்று மமதையுடன்ஒரு look விட்டேன். கையில் இருக்கும் MBA பையை இன்னும் இறுக்கப்பிடித்துக்கொண்டே அந்த IMF என்ற தங்க எழுத்துக்களை ஒரு நீண்ட நாவலைப்படிப்பதைப்போல் பார்த்துக்கொண்டிருக்கையில் மறுபடியும் தெனாலி கமலஹாஸனான என்னை
'க்யா சாஹியே' என்ற மலையாளம் தொனிக்கும் ஹிந்தி வார்த்தைகள் யதார்த்தத்திற்கு இழுத்து வந்தன.

IMF 05:
மெதுவாகத்திரும்பிய என்னை
கருப்பர்அல்லாத கருத்த நிறம் கொண்ட ஒருவர் நீல நிற சீருடை உடுத்தி கண்களால் என்னை நிறுத்தாமல் நிறுத்தி கேளவிகள் கேட்க ஆயத்தமானார்.
நேராக அந்த அகல விரிந்த படிகளை ஏறி வானளாவி நிற்கும் அந்த சொர்க்கவாசலைத்திறந்து, பழகி வைத்திருந்த அந்த புன்சிரிப்பை உதிர்த்து வலது கையை நீட்டி[ks1]  என்னை அந்தAmerican accentல் 'I am Kumar ஸ்வாமிநேதன், I have an MBA from .....என்று கூற நினைத்தால்... இவர் யாரு பசவங்குடி நந்தி மாதிரி என்று யோசிக்க ஆரம்பித்து ஒரு கணத்தில் திரட்டி வைத்திருந்த confidence எல்லாம தவிடு பொடியாகி 'கிடைக்காது, குடுக்க மாட்டான், ஏன் குடுக்கணும்னு தருமியாகி அரற்றிக்கொண்டிருந்த சமயத்தில் என் தோளைத் தொட்டது சிவனும் இல்லை, சிவாஜியும் இல்லை. நம் சேர நாட்டு மலையாள Gate Keeper! 'Dont stand here' என்று அவருக்கு சொல்லிக்கொடுத்த கட்டளைகளைச்சொல்லி என்னை அப்புறப்படுத்த ஆயத்தமானார். சென்னை consulate officer என்னைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்.

IMF 06:

அவரிடம் பம்மிக்கொண்டே 'வேலைக்கு Applicaion குடுக்க வந்தேன்.'

'அப்பிடியெல்லாம் இந்தியா மாதிரி எங்க வேண எப்பவேணா நுழைஞ்சு யார வேணா பாத்துட முடியாது. Appointment இருந்தாத்தான் உள்ள போக முடியும்'

இவர் என்னவோ ஆகசத்துலேருந்து நேர குதிச்சா மாதிரி ...

முகம் கருத்து, கண்கள் ஒளியிழந்து, தொனியில் வருத்தம் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.

 இறங்கி வந்து, 
"சேட்டா, இங்க எல்லாம் யாரையானும் தெரிஞ்சாத்தான் உள்ள நுழைய முடியும்.நிறைய Indians வேலை பாக்கறாங்க இங்க. எல்லோரும் politicians, Finance Ministry officials, IFS OFFICERS, Reserve Bank officers அவங்களோட சொந்தக்காரங்க தான். அதனல யாரானும் influence புடிச்சு வர்ற வழியைப்பாரு'
ன்னு அறிவுறுத்தி அடுத்த MBAவிடம் 'க்யா சாஹியே' என வினவப்போனார்
நான் விரக்தியை விரட்டியடிக்க ஆபரஹாம் லிங்கன் statueவை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

........முற்றும்.


வெளிச்சத்தில் இருட்டு





இப்ப என்ன காலங்கார்த்தால கோடம்பாக்கத்துல ஜோலி, சனிக்கிழமை ஒரு நாள் நிதானமா சமைக்கலாம்னா, காபி டிபன்னு சாப்பாட்டுக் கடையை ஆரம்பிக்கச் சொல்றேளே!

இத பாரு ரங்கம், நீ தானே தினம் "நீங்க எழுதின கதையெல்லாம் ஒரு ஈ, காக்கா படிக்கறதில்ல, இருக்கிற கீக்கிடத்துல தூசு படிஞ்சிண்டிருக்கு, பழைய பேப்பர் கடைல போட்டா நாலணா, எட்டணா கிடைக்கும்னு சொன்ன? அதை பழைய கடைல போடத்தான், வெயிலுக்கு முன்னாடி, கோடம்பாக்கத்துல ஒரு பட்சணக்கடை தெரியும், அவங்கிட்ட போலாம்னு கிளம்பினேன்.

ஏன், நம்ப தெரு முனைல இருக்கற கடைல போட்டா போறாதா, உங்க கதைகளுக்கு பட்சண வாசனை தான் வேணுமோ ன்னு சொல்லி தட்டு ல 3 இட்லியும், மிளகாய்ப்பொடியும் கொண்டு வந்து 'டங்' னு வைத்தாள் ரங்கம். சட்னி கேக்க ஆசை தான். ஆனால் அதைக்கேட்டால் தானே அது வாகி விடுவோமோ என்ற பயத்தில் போட்டதை சாப்பிட்டு எழுந்தார். தன் கதைகளை பத்திரமாக, போன வருடம் அவள் தீபாவளிக்கு வாங்கிய புடவைக்குக் கிடைத்த -கட்டை கைப்பிடி வைத்த -Pothy's bagல் paper நுனி மடியாமல் வாஞ்சையுடன் எடுத்து வைத்தார். பட்சணக் கடைக்காரர் அவர் பையை வாங்கிக் கொண்டு 80 ரூபாய், 50 காசு கொடுத்தார்.

திருவல்லிக்கேணி வீட்டிற்கு வந்து சேரும் போது மதியம் 1 மணி ஆகிவிட்டது. Solar power, gobar gas, kerosene என்று எதுவுமே இல்லாமல் கொதித்துக்கொண்டிருந்த ரங்கமும் global warmingக்கு முக்கிய காரணம் என அவர் உறுதியாக நம்பினார். 'ரங்கம், இந்த 80ரூபாய், 50 காசை உள்ள எடுத்து வை' னு சொல்லிட்டு குளிக்கப் போனார்.

10 நாள் இருக்கும். Phone அடிச்சது. அதை எடுத்ததும், "sir, திலகன், எழுத்தாளர் இருக்காரா.'

'நான், திலகன் தாம்பா பேசறேன்'

"அப்படியா, அப்ப நல்லதா போச்சு, உங்களை நலன் குமாரசாமி இப்பவே பாக்கணுங்கறார் sir, Bharani Studio வாங்க."

யாருப்பா நலன் குமாரசாமி

Cinema producer, director sir. இப்ப கூட ,"கூட்டம் வந்தால் தனித்திருக்க முடியாது" னு ஒரு படம் 5 வாரமா house full ஆ போயிட்டிருக்கே, அதோட இளம் director sir. உங்க 'வெளிச்சத்தில் இருட்டு' ங்கற கதையை படிச்சிட்டு இப்பயே உங்களைப்பாக்கணுங்கறார் sir , கிளம்பி வாங்க, வண்டி அனுப்பறோம்.

ரங்கம், நான் வெளில கிளம்பறேன். சாப்பாடு வேண்டாம். சாயங்காலம் ready ஆ இரு, தங்க மாளிகை போவோம் என்று சொல்லிக்கொண்டே company carல் ஏறி உட்கார்ந்தார்.

அந்த கோடம்பாக்கம் பட்சணக் கடை ல தான் சினிமாக் காரங்க எல்லாம் snacks வாங்குவாங்க, அங்க பட்சணத்தைநிராகரிக்கப்பட்ட கதைகள் எழுதின paper ல தான் பொட்டலம் கட்டி எல்லோருக்கும் போகும் எனத் தெரிந்து சிரமத்தையும், ரங்கத்தோட கோவத்தையும் பொருட்படுத்தாம அன்னைக்கு கோடம்பாக்கம் போய் தன் கதைகளைப் போட்ட தன்னோட செயலைத் தானே மெச்சிண்டு பரணிக்குள்ள தரணி ஆளும் கனவுகளோடு நுழைந்தார்!



  அப்துல்காதரும் அய்யாசாமி ஐயரும்

அய்யா சாமி ஐயரை  நீங்க தெரிஞ்சுக்க   வேண்டியது மிக அவசியம்.  அவர் ஒரு பரோபகாரி.  கையில் காலணா காசு  கிடையாது.ஆனால் தான் பார்ப்பவர்களுக்கெல்லாம் நம்பிக்கையை அள்ளி வீசுவார்.  முழு மனதுடன் தான்.  தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர் என எல்லோர் வாழ்வையும் மேம்படுத்தப் பார்ப்பார்.

இவருக்கு  central government உத்தியோகம். தலைமை குமாஸ்தா. காலை 10 மணிக்குப் போனால் மாலை 5 மணிக்கு மூட்டை கட்டி வைத்து வந்து விடலாம். சம்பளம் ஒன்றும் அதிகம் கிடையாது.  ஆனால் அவருக்குத் தேவைகளும் அதிகம் கிடையாது.  மனைவி(கோமளம்) க்கும் அதிகம் எதிலும் நாட்டம் கிடையாது.  தான் உண்டு, தன்னுடைய குமுதம், விகடன், கல்கி, அமுத சுரபி, கலைமகள், மஞ்சரி, ராணி, ராணி முத்து என வார, மாத பத்திரிகைகளிலேயே அவள் திருப்தி அடைந்து விடுவாள்.  மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்கு வருடத்திற்கு  நாலு புடவை, ரவிக்கை. அதற்கு ஏதோ நாடோடி புடவை வியாபாரியிடம் சீட்டு கட்டி மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் அடைத்து வருவாள்.  

அந்த நாடோடி புடவை வியாபாரியைப் பார்க்கவே ஸ்வாரசியமாக இருக்கும்.  அவர் வெள்ளை வெளேர் என்று பைஜாமா போட்டிருப்பார். காதில் சன்னம்மாக ஒரு கடுக்கன். கையில் வெள்ளியில் தடியாக ஒரு வளையல் போல் ஒன்று அணிந்திருப்பார்.  அவருக்குப் பின்னாலயே ஒருவர் தொளாம் புளாம்னு ஒரு pant போட்டு MGR க்குப் பிடித்த நிறத்தில் ஒரு சட்டை அணிந்து வியர்வை சொட்ட ஒரு பெரிய மூட்டை ஒன்றை தூக்கி வருவார். கோமளம் மாமி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்வார்.  கூட வந்தவரும் முட்டையை இறக்கி வைத்து விட்டு தலையில் கட்டியிருந்த முண்டாசை உதறுவார். இவர்கள் வந்தது எப்படியோ மாமிக்கு தெரிந்திருக்கும்.  வரும்போதே கையில் ஒரு சொம்பு நிறைய ஜலம் கொண்டு வருவாள். வந்தவாறே "என்ன சேட்டு, எப்பவும் புதன் கிழமை தானே வருவீங்க இப்ப என்ன திங்கக் கிழமையே வந்து நிக்கறீங்க? புடவை ஏதும் விக்கலையோ" என பேரம் பேச முத்தாய்ப்பாய்  சொல்லி வைப்பாள். அவரும் சளைக்காமல், "மாமி, நம்பிள்கி புது சரக்கு வந்ததும் மொத மொதல்ல நிம்பிள்கி காட்டலாம்னு வந்தா இப்பிடி சொல்றது நல்லா இல்ல. சீக்கிரம் செலக்ட் பண்ணிட்டு போணி பண்ணு மாமி.  இன்னும் நாலு அஞ்சு தெருவுக்குப் போவனும்" என்பான்.  அதற்கு அவள், "போன தடவை நீ கொடுத்த பொடவை ஒரே சாயம் போயி கட்டவே முடியலை. அதை திரும்ப எடுத்துட்டு இப்ப எனக்கு வேற நல்ல பொடவையா  குடுத்துட்டுப் போ' என்றவாறு அவர்கள் பேரம் தொடங்கும். இது 3 மாதத்திற்கு ஒரு முறை சொல்லி வைத்தாற்போல் நடக்கும் சம்பவம். 

அவர் வருடத்திற்கு இரண்டு வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை இரண்டு.  இதைத் தவிர அவர்களுக்கு வேறு பெரிய செலவு என்று ஒன்றும் கிடையாது. குழந்தைகளும் கிடையாது.  இந்த செலவுகளுக்கே ஒன்ன பிடிச்சுக்கோ என்னை பிடிச்சுக்கோன்னு இழுபறி தான். மூணு மாசத்துக்கு ஒரு தரம்  டவுன் ல இருக்கற Head Office சென்று கோவிந்தராஜ ஐயங்கார்  கிட்ட போ ய் நாலு திட்டு வாங்கிட்டு ஒரு மாசத்து சம்பளத்தையும் advance ஆ வாங்கிண்டு வந்தாத்தான் குடும்பத்தை நடத்த முடியும்.  கோவிந்தராஜ ஐயங்கார்கிட்ட திட்டு வாங்கறது கூட அவருக்கு பிரச்சனை இல்ல. அவரோட அநாகரிகமான Jokes அதுக்கு சிரிக்க வேண்டிய கட்டாயம் ரெண்டும் தான் torture torture ..என்ன பண்றது லோன் வேணுமே! சகிச்சுக்க வேண்டியது தான். 

லோனை வாங்கிட்டு நேரா ஹைகோர்ட்டுக்கு எதுத்தாப்பல இருக்கற  ஆர்ய  பவனுக்குப் போய் அந்த சர்வர் ஐப் பார்த்து, "ராஜா , இன்னிக்கு என்ன special" என்று ரொம்ப தனதா கேட்பார்.  அந்த சர்வர் எங்கேயோ பாத்துண்டே ஒரு முப்பது item  ஒப்பிப்பான். இவர் எல்லாத்தையும் கேட்டுட்டு,   "ரொம்ப எண்ணை ஊத்தாம,வெங்காயத்த பதமா  வறுத்து, அப்படியே  மாவுல பச்ச மொளகாயையும்  பொடிப் பொடியா நறுக்கிப் போட்டு  மொற மொறன்னு முறுகலா, உறைப்பு தூக்கலா ஒரு ரவா தோசை, கூட வெங்காய சட்னி, தேங்கா சட்னி, சாம்பாரைத் தனித் தனி cup ல கொண்டா, மொளகாப் பொடியை மறந்துடாத" என்று ரொம்ப சிலாகிச்சு சொல்லி முடிக்கறத்துக்குள்ள   அந்த சர்வர் பின்னாடி பாத்து "ஒரு ரவா ஒனியன்" னு சொல்லிட்டு அடுத்த tableக்குப் போயிடுவான். இதுவும் மூணு மாசத்துக்கு ஒரு தடவை நடக்கற விஷயம். எந்த மாற்றமும் இருக்காது. அங்கேருந்து கிளம்பறச்ச மறக்காம கோமளத்துக்கு நெய் ஒழுக ஒரு tracing paper ல சுத்தின பாம்பே ஹல்வா. அப்படியே பூக்கடைக்குப் போய் அந்த பூக்காரி சரியா அளக்கறாளான்னு பாத்து 2 முழம் பூ வாங்கி தான் பத்திரமா மடிச்சு வெச்சிருக்கற மஞ்சக்கலர்  துணிப்பை ல பந்தோபஸ்து பண்ணி வெச்சிருப்பார். அந்த பூக்காரி இவரிடம் "எட்டணா பூ வாங்கறத்துக்கு இன்னாமோ இவ்ளோ உ த்து உத்துப் பாக்கற"ன்னு கருவிக்கொண்டே ஒதுங்கின முந்தானையை இன்னும் இறுக்கி சொருகிக்கொள்வாள்.

இவர் பொதுவாகவே எல்லோரையும் நேசிப்பவர்.  எல்லோருக்கும் தன்னால் ஏதேனும் உதவ முடியும் என நம்புபவர்.  தன்னை எல்லோரும் பயன் படுத்திக்கொள்கிறார்ர்கள் என்ற நினைப்பையே அண்டவிடாதவர்.  இவருக்கு இருக்கும் ஒரே ' கெட்ட' பழக்கம் சிகரெட் பிடிப்பது.  தினமும் காலையில் வேட்டியை ஒரு பக்கம் தூக்கிக்கொண்டு, கஷ்கத்தில் பையை அடக்கிக்கொண்டு colony முனைக்கு வந்ததும் முதல் வீட்டில் எட்டிப் பார்த்து, "பாப்பா, market க்குப் போறேன், ஏதானும் வேணுமா" என்பார்.  பாப்பா மாமியும் ' நல்ல காலம் மாமா கேட்டேளே, கொஞ்சம் கொத்தமல்லியும் , கருவேப்பிலையும் கெடச்சா வாங்கிண்டு வாங்கோ, இந்தாங்கோ நாலணா' என்பாள்.. இதே போல் பாரதி மாமி வீட்டில் எட்டிப் பார்த்து வெங்காயம் வாங்கி வருவதாக சொல்வார்.  இப்படியே தெரு மொனைக்கு வந்தால் ஒரு Berkeley சிகரெட்டைப் பத்த வைப்பார். இப்போது வேகம் பிடிக்க ஆரம்பிக்கும். அப்படியே கச்சேரி ரோடில் திரும்பி, ராயப்பேட்டா ஹை ரோடில் நடையைக் கட்டுவார்.  வழியில் பல பேருடன் சிரிப்பு, குசலம் விசாரித்தல், போஸ்டர் ஐ ஆங்காங்கே நின்று படித்தல் என்று ஒரு வழியாக தண்ணீர்  துறை market வந்து சேருவார். உள்ளே நுழையுமுன் சுருங்கிப்போன அந்த சிகரெட் துண்டை மனமின்றி கீழே போட்டு தன்  செருப்புக்  காலால் மிதித்து அணைப்பார்.



உள்ளே நுழைந்ததும் தனக்கெனெ ஒரு வழி வைத்திருப்பார். அந்த வழியில் தான் போவார். மேடை கட்டி கடைகள் இருக்கும். நேராக கொத்தமல்லி, கருவேப்பிலை , பொதீனா , இஞ்சி, மிளகாய் கூறு கட்டி வைத்திருக்கும் கிழவி கடைக்குப் போவார். அங்கு போய் "என்ன பேயம்மா , உன் மவனை pOlice புட்சுகிணு போயிட்டான்னு சொன்னியே திரும்ப ஊட்டுக்கு வண்ட்டானா'ன்னு கேட்டவாறே ரெண்டு கூறை ஒன்றாக சேர்த்து எடுக்கப் பார்ப்பார்.உடனே பேயம்மா பேருக்கு ஏற்றார்போல் பேய் வேகத்துல அவர் கையை 'கப்' னு பிடித்து ' இப்ப இன்னாத்துக்கு நீ இத்தை கலிக்குறே"ன்னு சொல்லி அவரை முறைப்பாள். அதற்கு அவர் "சரி, கையை விடு, இன்னிக்கு உனக்கு மனசு சரியில்லைன்னு நினைக்குறேன், அப்பால வந்து பேசறேன்" என்று சொல்லி அங்கிருந்து நகரப் பார்ப்பார். "அய்ய, இப்ப இன்னா சொல்ட்டேன்னிட்டு இப்பிடி வெலகற, கலிக்காதேன்னு தானே சொன்னேன். எட்துக்க , உனிக்கு இல்லாததா?
E 1   ஸ்டேஷன் ல தான்   வெச்சுக்குறாங்களாம், துட்டு குட்தாத்தான் உடுவாங்களாம். ஒனக்கு எவனையாச்சும் தெரியுமா அங்க, நான் எங்க போவறது 5, 10 க்கு? கூழு, கஞ்சிக்கே வழி இல்ல இதுல இவுனுக வேற".

E1 தானே, கவலையை விடு, நான் இப்ப போய் .பேசி அவனை ஊட்டுக்கு  அனுப்பிவைக்கிறேன்.  அவனை இனிமே தப்பு  தண்டாக்குப் போகாம தான் உண்டு தன் ரிக்சா உண்டுன்னு கம்னு இருக்க சொல்லு" என்று சொல்லி நாலணா காசை அவளுக்கு குடுத்தார். 

"என்ன Sir, ரெண்டு வாரமா ஆளைக்காணோம்." என்று கட்டைத் தொண்டையில் அந்த Marketக்கே கேட்கும் அளவில் கேள்வி கேட்ட லோகு முதலியாரைப் பார்த்து ''இல்லையே முதலியார், நேத்து கூட வந்திருந்தேனே, உங்களுக்கு வியாபாரம் எப்படி போயிட்டிருக்கு' என்று கேட்டார். அதற்கு, 'என்னத்தைச்சொல்றது, 7 மூட்டை வாங்கினா அதுல 2 மூட்டை அழுகல். வண்டி ஏத்தி இறக்கறதுல ஒரு கால் மூட்டை போயிடும். அதுல உங்க மாதிரி ஆட்கள் வேற பேரம் பேசி வாங்கின வெலையை விட கம்மி வெலைக்கு குடுக்கவேண்டி இருக்கு. இந்த பொழப்புக்கு நாலு எழுத்து படிச்சிருந்தா உங்க மாதிரி ஒரு கவுர்மண்ட் உத்தியோகத்துல பொழுது போக்கியிருக்கலாம்' என்று தன்னுடைய நவரத்தின மோதிரத்தை துடைத்தவாரே தராசுத்தட்டைக் கையில் எடுத்தார். அய்யாசாமி ஐயர் முதலியார் கடைக்குப் போவதில்லை. ஒரு நாள் முதலியாரிடம் வேலை பார்க்கும் குப்பன் இவருக்கு கொசுறாக 2 உருளைக்கிழங்கைப் போடுவதைப்பார்த்து அவனை அடித்து நிமிர்த்தி விட்டாராம். அன்றைக்கே அவன் வேலையை விட்டு நின்று விட்டான். பிறகு இவர் தான் அவனுக்கு TUCSல் permanent ஆக ஒரு temporary உத்தியோகம் வாங்கிக் கொடுத்து விட்டார். முதலியாரின் குரல், மனிதர்களை நடத்தும்விதம் முதலியவை ஐயருக்கு உடன்பாடில்லை ஆதலால் அந்தக் கடைக்கு அவர் செல்வதில்லை.

அதைத் தாண்டியதும் தேங்காய் கடை. ஐயர் எப்போதும் இந்த நாயர் கடையில் தான் தேங்கா பத்தை ('baddhai') வாங்குவார். அவ்வப்பொழுது முழூத் தேங்காயை உடைத்து அதில் வரிசையாக கீத்து போட்டு 4 அல்லது 5 baddhaiகளை கூறு கூறாக அழகாக ஒரு சாக்குத்துணியின் மேல் எடுக்க இலகுவாக பரத்தி வைப்பார். அப்பொழுது தான் ஈரத்தை உறிஞ்சி நீண்ட நேரத்திற்கு விற்பனைக்கு வைக்க முடியுமாம்.




அங்கிருந்து நகர்ந்தவாறே அந்த வாழை இலைக் கடையை நெருங்கினார். அவர் வருவதைப் பார்த்ததும் அந்தக்கடைக்காரர், அப்துல் காதர், கையில் இருந்த வாழை இலையையும், கறை படிந்த கத்தியையும் நகர்த்தி வைத்துவிட்டு எழுந்து நின்று வணங்கியவாரே அய்யாசாமி ஐயரை வரவேற்றார். கூடவே, அங்கிருந்த பையனை,  "தம்பி, அந்த இருக்கையை Sirக்குப் போடுப்பா" என்றார். அந்தப் பையனும் சிரித்தவறே ஓடி வந்து அந்தக்கடை மேடைக்கு அடியிலிருந்து ஒரு மர stoolஐ கையிலிருந்த ஈரத்துணி கொண்டு அழுக்கில்லாமல் துடைத்து 'உட்காருங்க சாமி' என்று கூறி நகர்ந்து நின்றான்.

அவர் அந்தப் பையனைப்பார்த்து 'என்ன, சையத், schoolக்கு போயிட்டிருக்க இல்ல? அத்தை மாத்திரம் விட்டுடாதே, என்ன," என்று கூறியவாறே அந்த இருக்கையில் அமர்ந்தார். "என்ன Bhai, ஒவ்வொரு முறையும் கைக் காரியத்தை போட்டுட்டு எதுக்கு எந்திரிச்சு நிக்கற, உட்காரு, உட்காரு. வியாபாரம் எப்படி போயிட்டிருக்கு?"

"நல்லா போயிட்டிருக்கு சாமி, கல்யாண season வேற. எல்லாத்தையும் கவனிக்க நேரம் பத்தலை".

"Bhai, தீப்பெட்டி குடேன், இந்த சிகரெட் பத்த வெச்சுக்கறேன்." என்று கூறியவாறே தன்னை அந்த இருக்கையில் சௌகரியப்படுத்திக் கொண்டார்.

அப்துல் காதரும் அவரிடம் தீப்பெட்டியைநீட்டியவாறே " இதை நிறுத்திடுங்களேன் சாமி " என்று பம்மி பம்மி சொல்லி முடித்தார்.

"அத பாரு Bhai, நானும் முயற்சி பண்ணித்தான் பாக்கறேன். முடியலை Bhai. தினம் ஒவ்வொண்ணா வாங்கி குடிச்சா கணக்கில்லாம போவுதேன்னு ஒரு டப்பால 50 சிகரெட் அடுக்கி வரும் பாத்தியா அதை வாங்கி வெச்சேன். வீட்டுல கோமளம் கூட கேட்டா", 'என்ன ஒரேடியா இத்தனை சனியன்? ஒண்ணு ரெண்டுன்னு இல்லாம டப்பா டப்பாவா பொகச்சு தள்ளப்போறேளா?'ன்னு.

நான் சொன்னேன், 'இத பாரு கோமளம், தினம் ஒவ்வொரு வாட்டியும் கடைக்கு நடக்க முடியலை. அதைத்தவிர கடைக்க போறச்ச ஒண்ணு, கடைல ஒண்ணு, வீட்டுக்கு திரும்பி வர்ரச்ச ஒண்ணுன்னு அங்கேயே 3 ஆயிடறது, அப்புறம் வீட்டுல நாலஞ்சு. இப்படி டப்பால வாங்கி வெச்சுட்டா கணிசமா கொறச்சுடுவேன்'.

""என்னவோ பண்ணுங்கோ" ன்னு சொல்லி விட்டுட்டா.  அதுக்கப்புறம் அவ சொன்னா மாதிரியே டப்பால இருக்கேன்னு சபலத்துனால அடிக்கடி எடுத்து குடிச்சு 10 நாள்லயே எல்லாம் தீர்ந்து போச்சு. மறுபடியும் ஒவ்வொண்ணா வாங்க ஆரம்பிச்சுட்டேன்." என்று கூறியவாறே கையில் இருந்த சிகரெட்டின் சாம்பலை அங்கிருந்த கொட்டாங்குச்சியில் தட்டி மற்றமொறு இழு இழுத்தார்.

அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே அப்துல் காதர் ஒரு கிழிசல் இல்லாத நீண்ட இலையை எடுத்து அதன் முதுகில் இருந்த கட்டையை ஒரே சீராக தன் கத்தியால் சீவினார். "நாளைக்கு நம்ப judge வீட்டுல திதியாம் அம்மா phone பண்ணி 50 நுனி எலை அப்பழுக்கு இல்லாம, ஒரே size ல வேணும்னு கேட்டிருக்காங்க, அதான் சீவிட்டிருக்கேன்."

"ஆமா, ஆமாம் நீ உன் வேலையைப்பாரு. நான் உன் பையன் ஜாபர் பத்தி பேச வந்தேன். இந்த வருக்ஷம் +2 எழுதறான்னு சொன்னியே, மேல என்ன பண்றதா உத்தேசம்".

"நமக்கு என்ன சாமி, எலை வியாபரம் தான். அவனுக்கு பிள்ளையார் கோவில் வாசல்ல ஒரு கடையை அமச்சு குடுத்துட்டேன்னா அவன் பொழச்சுப்பான்".

"அப்படியா? நான் சொல்றேனேன்னு நெனச்சுக்காத, எலை வியாபாரம் இன்னும் எத்தனை வருக்ஷத்துக்கு? சொல்லு. ஓட்டல்லாம் பீங்கான் தட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க, பிராமின்ஸ் வீட்டுல எவர்சில்வர் தட்டு வைக்கறாங்க, அதைத்தவிர இப்பல்லாம் யாரு திவசம், திதி, நோன்பு இருக்காங்க? வைதீகங்கறதே அழிஞ்சிண்டு வரது. இப்பல்லாம் தொன்னை எங்கியானும் பாக்கறியா? நான் கோவில்கள்ல கூட அந்த தொன்னைகளைப் பாக்கறதில்லை. பாயசம், இனிப்பு பொங்கல் முதற்கொண்டு பேப்பர் cupல குடுக்கறாங்க. அதே மாதிரி தான் வாழை இலையும் காலப்போக்குல காணாமப் போயிடும். போன வருக்ஷம் என்ன ஆச்சு? உனக்கு எலை எல்லாம திருநெல்வேலில ஶ்ரீவைகுண்டத்துலேருந்து வரும்னு எதிர் பார்த்த. காத்து, மழைல மொத்த வாழைத்தோப்பும் மழைலயும் காத்துலயும் சிக்கி ஒத்த எலை வரலை. அதுக்கு முந்தின வருஷம் திருவனந்தபுரம், நாகர்கோவில் பக்கத்துலருந்து தருவிக்கறதா சொன்ன. லாரிக்காரங்களும், கூலிக்காரங்களும் செஞ்ச strikeல எலை எல்லாம் அழுகிப் போச்சு. ஏதோ உன்னோட அனுபவத்துனாலயும், நல்ல மனசுனாலயும் பெரிய அளவுல நஷ்டமில்லாம சமாளிச்ச. எப்பயும் இத மாதிரி முடியுமா, யோசி Bhai! இதுல உன் பையனையும் இறக்கி உட்டேன்னா அவன் பொழச்சுப்பானா பாத்துக்க. என்ன நான் சொல்றது?"

"நீங்க சொல்றது எல்லாம் சரி தான் சாமி. எனக்கு வேற தொழில் ஏதும் தெரியாதே சாமி. அதான் யோசிக்கறேன்."

"Bhai, பையனுக்கு இன்னும் 5, 6 வருஷத்துல நிக்காஹ் பண்ணி ஆவணும். நீங்கல்லாம் உறவுலயே தான் பண்ணுவீங்கன்னு சொல்றாங்க. இருந்தாலும், உங்க மத வழக்கப்படி, பொண்ணுக்கு பையன் வீட்டுக்காரங்கதான் கோடி கணக்குல சீர், செனத்தி சேயணும்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுக்கெல்லாம் எங்க போவ, அந்த பணத்துல எடத்த வாங்கி எலை கடையை வெச்சுட்டேன்னா?"

"சரி சாமி, இன்னைக்கு வீட்டுக்குப் போய் கலந்து பேசறேன் சாமி."

நான் என்ன சொல்றேன்னா, பையனை மேல படிக்க வை. அதனால அவனுக்கு நிரந்தர வருமானம் ஒண்ணு வரட்டும். அப்புறம் அவனும் அப்படியே இந்த வியாபாரத்தையும் கவனிச்சுக்கட்டும். நல்ல முடிவுக்கு வா. மேற்படி ஆக வேண்டியதைப்பார்ப்போம்.  ராயப்பேட்டைல உங்க ஆட்களுக்காகவே ஒரு college நடத்தறாங்க. Triplicane கவுன்சிலர் எனக்கு தெரிஞ்ச ஆளு தான். ஹிந்தி படங்கள்லாம் போடுவாங்களே அந்த தியேட்டர் பக்கத்துல தான் அவர் வீடு. அவர்கிட்ட அழைச்சுட்டுப் போறேன். Marks முன்ன பின்ன இருந்தாலும் கலீபத்துல்லா ஒரு வார்த்தை போட்டார்னா admission, scholarship எல்லாம் வக்பு board லேருந்து கடைச்சுடும். ஒண்ணும் கவலைப்படாதே. நாள, நாளன்னிக்கு பேசிவோம். நாட்களை ரொம்ப கடத்திப் போடாதே" என்று கூறி இன்னொரு சிகரெட்டைப்பற்ற வைத்து நேரமாகிவிட்டதை எண்ணி வேட்டியை 'டப்பா' கட்டாக கட்டி நடையைக் கட்ட ஆரம்பித்தார். 

அபதுல் காதர் எழுந்து நின்று குரல் தழுதழுக்க அய்யாசாமி ஐயருக்கு விடை கொடுத்தார்.

அடுத்த வாரம் ஆகி விட்டது.  அய்யாசாமி ஐயர் காலை வெயில் தாங்காமல் தலையில் ஒரு ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு இலைக்கடை வந்து சேர்ந்தார். அவர் கடை அருகில் வந்ததுமே வாட்டசாட்டமான உடலுடன் அரும்பு மீசையும் லுங்கியுமாய் ஒரு வளர்ந்த பையன் அவருக்கு சலாம் போட்டவாறே stool ஐ இழுத்துப் போட்டான்.

என்ன ஜாபர் , "எப்பிடி இருக்க, ரொம்ப நாளா  கடை பக்கம் ஆளைக் காணோம்"?

அதற்கு அப்துல்காதர், "exam க்கு படிச்சிட்டிருந்தான் ஐயா", என்றார்.

"என்ன Bhai , பையன் கொரலை கேக்கலாம்னா நீ முந்திக்கற? என்ன ஜாபர் பரீட்சை எழுதி முடிச்சிட்டியா"?

"முடிச்சிட்டேன் Sir .  நல்லா எழுதி இருக்கேன்.  அப்பா உங்க கிட்ட பேச சொன்னாரு. நாளைக்கு result வருது ஐயா. Collegeக்கு application போட....

"Very  Good . Very good .  இன்னிக்கு என்ன பண்ற , அப்பா கிட்ட ஒரு Rs 100 வாங்கிக்கிட்டு,நேரா cycle எடுத்திட்டு ராயபெட்டா போ. எங்க தெரியுமோல்யோ"?

"தெரியும் sir , அந்த Pilot தியேட்டர் போயி..."

"அதானே பாத்தேன், ராயபெட்டான்னா, Pilot , Sangam தியேட்டர், Swagath ஹோட்டல் தெரியாம இருக்குமா? ஒரு படத்தை பாத்துட்டு, Swagath ல நல்ல Tiffin சாப்டுட்டு, New College போ.  சைக்கிள் ஐ ஓரமா வெச்சு பூட்டிட்டு பெரிய்ய Queue நிக்கும். அதுல போய் நின்னு  application form வாங்கிக்க. அப்புறம் நேரத்தை வீணாக்காம நம்ப வீட்டு பக்கம் வா.  நானும் சாப்டுட்டு ஒட்கார்ந்திருப்பேன். Form நான் சொல்லித்தரா மாதிரி Fill Up பண்ணு.  மறு நாள் College க்குப் போய் மொத காரியமா register பண்ணிட்டு வந்துடு. ஒரு number குடுப்பாங்க. அதை பத்திரமா எடுத்திட்டு எங்கிட்ட வந்து குடுத்திடு.  அப்புறம் councilorஐ எப்ப பாக்கறதுன்னு சொல்லி விடறேன். அப்பாவையும் கூட்டிட்டு வந்துடு. காரியத்தை முடிச்சிட்டு வந்துடுவோம்".

அந்த வியாழக்கிழமையே மூவரும் கவுன்சிலர் பார்க்க Bhai  எடுத்து வந்திருந்த Taxi யில் கிளம்பினர். Admission டைம் ஆனதால் ஏக கூட்டம் அவர் வீட்டு வாசலில். ஐயர்  ஒரு துண்டு சீட்டில் தன்  பெயரை எழுதி உள்ளே அனுப்பினார். அடுத்த 10 நிமிடத்தில் கவுன்சிலர் கூப்பிய கரங்களுடன் ஐயரைப் பார்க்க வெளியே வந்து அவரை உள்ளே அழைத்தார். யர் கூடவே Bhai ஐ யும் Jaffer ஐயும் உள்ளே  அழைத்துச் சென்றார் .உள்ளே சென்றதும் கலீபதுல்லா (councilor ) Bhai ஐப்  பார்த்து, 'இன்னிக்கு நான் councilor ஆ இருக்கேன்னா அதுக்கு ஐயர் தான் காரணம்.' என்றார்.

அதற்கு ஐயர் , 'என்னப்பா, நீ வேற, நீ ஏழை மக்களுக்குப் பண்ற  தானம் தாம்பா உனக்கு இந்த பதவியை வாங்கி கொடுத்திருக்கு.  நீ நல்லா  இருக்கணும். இன்னும் நிறைய மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்.  அதான் என் விருப்பம்" என்றார். உடனே, Bhai ஐக்  காண்பித்து, இவர் எனக்கு வேண்டியவர், ரொம்ப நாளா பழக்கம். இது Jaffar . இவரோட ஒரே மகன். நல்ல படிப்பான். மேல படிக்க சொல்லி நான் தான் நம்ப college apply  பண்ண சொன்னேன். நேத்திக்கு  போட்டுட்டான். உன்கிட்ட கூட்டிட்டு வந்தா உதவி பண்ணுவேன்னு கூட்டிட்டு வந்தேன். நம்ப Board லேருந்து ஏதேனும் scholarship க்கு எற்பாடு பண்ணினா Bhaiக்கு உதவியாய் இருக்கும்". 

"நிச்சயமா பண்றேன் ஐயரே. கெடச்சிடும். நல்ல படிக்கணும் தம்பி. strike அது இதுன்னு போயிட்டேன்னா நல்லா இருக்காது. அப்புறம் நம்ம எல்லா பேரும் கெட்டுடும் பாத்துகங்க Bhai".  

சரிப்பா, ரொம்ப Thanks, உன்னை பாக்கணும்னு நெறைய  பேரு காத்துட்டிருக்காங்க, வீட்டுல எல்லாம் சொகந்தானே, அப்ப வரட்டுமா" என்று சொல்லி கிளம்பியவரைத் தனியே அழைத்துப் போய்  ' அடுத்த வாரம் சொல்லி அனுப்பறேன், உங்க கிட்ட வெவரமா ஒரு property வாங்கறதைப் பத்தி பேசணும்.  அதுல ில்லங்கம் யேதும் இல்லியான்னு விசாரிச்சு சொல்லிட்டீங்கன்னா ஒதவியா இருக்கும்."

"அதுக்கென்னப்பா, எப்ப வேணா  சொல்லி அனுப்பு , பேசுவோம், சரியா?  வரேன் அப்ப." என்று சொல்லி மூவரும் Taxi யில் ஏறினர்.

சொல்லிவைத்தாற்போல் Jafar க்கு admission  லெட்டெரும் , முழு scholarshipஉம்   2 வாரங்களில் வந்தது. Bhai க்கு ஏக மகிழ்ச்சி. உடனடியாக ஒரு கூடை நிறைய மாம்பழங்களும் அப்போதுதான் வந்திருந்த காயல்பட்டினம் அல்வா packet ஒன்றும் ஐயர் வீட்டிற்கு நேரில் எடுத்துச்சென்று கொடுத்தார்.  ஐயரும் அவருக்கு நாயர் கடையிலிருந்து Tea தருவித்துக் கொடுத்தார். "Bhai , ஞயாபகம் வெச்சிருந்து இந்த காயல்பட்னம்  அல்வா கொண்டுவந்த பாரு, அது தான் நம்ப Bhai ங்கறது.அதுல எப்பிடி இவ்வளவு முந்திரியும், பிஸ்தாவும்,  ஆல்மண்டும் , திராட்சையும் போட்டு சுவையா பண்றாங்கன்னு தெரியல.  திருநெல்வேலி அல்வா, அது ஒரு மாதிரி taste , இது வேற மாதிரி taste.  பையன நல்லா  படிக்க சொல்லு.  ரொம்ப தேங்க்ஸ் அல்வாக்கு. அப்புறம் market ல பாக்கறேன். Cycle ல பத்திரமா போயிட்டு வா.

நாட்கள் ஓடி விட்டன. 3 வருடங்கள் கடந்து விட்டது. அய்யாசாமி ஐயரும் அவரது அன்றாட செயல்களைத் தவறாமல் செய்து வந்தார். சிகரெட் அவரது நுரையீரலை பாதிக்க ஆரம்பித்து விட்டது. இருப்பினும் தன் நட்பு வட்டாரத்தை விடாமல் சந்தித்து வந்தார். மார்கெட் போவது அவருக்கு ஒரு பொழுது போக்கு. அதைத் தொடர்ந்து செய்து வந்தார்.

அப்போது தான் ஒரு நாள் இவர் வீடு தேடி ஒரு அல்வா packet உடன் ஜாபர் வந்தான். திண்ணையில் இருந்த அவரைப்பார்த்து வணங்கி 'B.Com pass சேஞ்சுட்டேன்யானு சொல்லி அந்த காயல்பட்ணம் அல்வாவைக் கொடுத்தான்.

'அது இருக்கட்டும், 'pass' னா எப்படி, First Class தானே.

'ஆமாங்கய்யா, Accounting, Audit distinction யா' என்று பெருமையாக சொன்னான்.

Very Good, Very Good, அடுத்து என்ன பண்ணப் போறே?

CA படிக்கணும்னு ஆவலா இருக்கேன்யா. Friends எல்லாம் A.F. Ferguson, Billimoria apply பண்றாங்க, நானும் அங்கேயே போடறதா இருக்கேன்யா.

'சரி, நீ போடு, நான் அவங்க partner ஒருத்தர் கிட்ட பேசறேன், ஜமாய்ச்சிடலாம் போ'என வாழ்த்தி அனுப்பினார். அப்துல் காதருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஜாபர்,  Ferguson சேர்ந்ததும் இவரை வந்து பார்த்துவிட்டு நன்றி சொல்லிச்சென்றான்.

இப்படி இருக்கையில் ஒரு நாள், ஜாபர் சாயங்கால நேரத்தில் பிள்ளையார் கோவில் வாசலில் உள்ள கடையில் இலை வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு பெண் அவனுடன் சிரித்துப் பேசிவிட்டு அப்போதுதான் அங்கிருந்து நகர்ந்து சென்றது.  ஐயர் அவனைப்பார்த்து, "CA படிப்பு எப்படி போயிட்டிருக்கு. இன்னைக்கு அப்பாக்கு help பண்ண வந்தியாக்கும்" என்றார்.

'அவனும், நல்லா போயிட்டிருக்கய்யா, அப்பா தொழுகைக்குப் போயிருக்காரு, அதான் நான் இங்க வந்தேன், வியாபாரத்தைப் பாக்க'.  

"சரி, சரி. அப்புறம் பார்ப்போம்" என்று கூறி நகர்ந்தார்.

அவர் வீடு வந்து சேர்ந்ததும், அவர் மனைவி, "எங்க போயிட்டேள்?, Judge ஆத்து மாமி சொல்லி விட்டார். அவர் உங்களைப் பார்க்கணும்னாராம். அவர் எதுக்கு உங்களை கூப்ட்டு விடறார். என்னன்னு வேணா கேட்டுட்டு வாங்கோ".

"சரி, சரி போயிட்டு வரேன், செத்த இரு" என்று சிறிது உட்கார்ந்தார். அரை மணி கழித்து காலில் செருப்பு மாட்டி தோளில் ஒரு அங்கவஸ்திரமும் போட்டு judge வீட்டிற்கு கிளம்பினார்.

Judge வீட்டை அடைந்ததும் அவரது மனைவி அவரை உள்ளே அழைத்துச்சென்று 'இதோ வந்துடுவார், எப்படி இருக்கேள், ஏதேனும் குடிக்கிறேளா' என வினவினாள். இவரும் சங்கோஜப்படாமல் 'காபி மட்டும் அரை tumbler குடுங்கோ எனச்சொல்லி வெளிச்சம் வந்த விட்டத்தை நோக்கினார். நல்ல அழகான அமைப்பு. மொட்டை மாடியில் அந்த hallன் உச்சத்தில் சதுரமாக கட்டி அதில் நாலு பக்கமும் shutter வைத்த ஜன்னல்கள். அதன் வழியே சூரிய வெளிச்சம் அந்த வீடு முழுவதும் வியாபிக்கும். இதனை அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காபி வந்து சேர்ந்தது. Judgeஉம் அவரது தொலைபேசி பேச்சை முடித்துக்கொண்டு இவர் இருந்த அறையில் நடு நாயகமாக இருந்த தேக்கு ஊஞ்சலில் வந்து அமர்ந்தார். அது கிறீச்சிட்டு லேசாக முன்னும் பின்னும் நகர ஆரம்பித்தது. 

மகாலிங்க ஐயர், High Court Judge. வெள்ளை பஞ்ச கச்ச வேஷ்டி; கை வைத்த பனியன்; தங்க கலர் strap கட்டிய பளிச்சென நேரம் காண்பிக்கும் கைக்கடிகாரம். பனியனூடே தெரியும் பூணூல். குடுமி. கணீர் என வேத பாராயணம் செய்யும் குரல். ஊஞ்சலில் அருகில் நிறைய தஸ்தாவேஜுகள் ஒரு padல் இரு புறத்திலிருந்தும் மிரட்டும் சிகப்பு நிறத்தில் வந்த நாடாவால் பிணைக்கப்பட்டிருந்தன.

அவர், அய்யாசாமி ஐயரைப்பார்த்து, 'என்ன ஓய் எப்பிடி இருக்கீர்' என தன் கனத்த குரலில் கேட்டார். அவரும், "நான் சௌக்கியமா இருக்கேண்ணா, நீங்க, ஆத்துல எல்லாரும் சுகந்தானே" என்றார்.

"அதான் ஓய், பொண்ணு B.Sc முடிச்சுட்டா. மேல படிச்சிண்டிருக்கா, இவளானா, வயசாறது, காலா காலத்துல கல்யாணம் பண்ண வேண்டாமாங்கறா, வாஸ்தவம் தான். இந்த காலத்துல உடனே நம்ப ஜாதகக் கட்டைத் தூக்கிண்டு நடந்துட முடியாதே அப்படீன்னு சொல்லிட்டு பொண்ணைக்கூப்பிட்டு ஒரு வார்த்தை கேட்டாக்க நாங்க எதிர் பார்த்தா மாதிரியே அவ யாரையோ நேசிக்கறேன்னு 'பட்' னு போட்டு உடைச்சிட்டா. எனக்கும், ஆத்துக்காரிக்கும் பொண்ணு விரும்பற பையனைத்தான் பண்ணிக்கொடுக்கணும்னு இருக்கோம். பையன் பேரு ஜாபர் ஆம். இவளோடயே Ferguson articleship பண்றானாம். நல்ல சூட்டிகையான பையனாம், பொறுப்பான பையனாம். அப்பா எலை வியாபாரமாம். எல்லாம் சரி தான். ஆனா நம்பளவா இல்லை. அது தான் மனசுக்கு சங்கடமா இருக்கு. உமக்கு அந்த Bhai ஐத் தெரியும்னு ஜாபர் சொன்னானாம், அதான் ஒம்மை கூப்பிட்டுப் பேசலாம்னு சொல்லி அனுப்பிச்சேன். என்ன சொல்றீர்?"

இந்த விக்ஷயத்தை சிறிதளவு கூட எதிர் பாராத அய்யாசாமி ஐயர் 'நான் என்னண்ணா சொல்றது' என தயங்கினார்.

இத பாரு ஓய், இந்த விஷயத்தை வேற யார்கிட்டயும் பேசறத்துக்கு முன்னாடி உம்ம கிட்ட பேசக் காரணம் என்னன்னா, உன்னோட பரோபகாரம், யாரு என்னன்னு பாக்காம எல்லாரோட வாழ்க்கையையும் மேம்படுத்த நீ தன்னலம் பார்க்காம எடுத்துக்கற சிரமம், எல்லா தட்டு மக்களுக்கும் உன் மேல இருக்கற அன்பு, மரியாதை, நம்பிக்கை இதெல்லாம் வெச்சு உன்னை கேக்கறேன் 'நீர் இன்னிக்கு என் நெலமைல இருந்தா உம்ம பொண்ணை வேத்து சமயத்தவாளுக்கு தாரை வாத்து கொடுப்பீரா, சொல்லும்'.

"அண்ணா, பகவான் எங்களுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்கலை. அப்படி கொடுத்திருந்தா என் குழந்தைகள் மனம் வருத்தப்படாம என்ன செய்யணுமோ அதைச் செய்வேண்ணா. இதுக்கு மேல எனக்கு ஒண்ணும் சொல்லத்தெரியலேண்ணா" என்று குரல் தழு தழுத்தார்.

"அய்யாசாமி ஐயர், எங்கேயோ போயிட்டீர் ஓய்! கேட்டியாடி அவர் சொன்னதை. இப்படி ஒரு diplomatic பதிலை அதையும் நீர் மனதுல நினைக்கறத கேக்கறவாளுக்கு உண்மை பிழம்பாம கொண்டு செலுத்தின விதம் யாருக்கும் வராது ஓய். நாங்க இதை ஏற்கனவே தீர்மானிச்சது தான். இருந்தாலும் உம்மை சீண்டி பாத்தேன். நீர் சொன்னா மாதிரி என் மகளோட விருப்பப்படியே அவளை ஜாபர்க்கு மணம் முடிச்சுத்தர எங்களுக்கு பரம சம்மதம். ஊர் உலகம் என்ன பேசுங்கறது எனக்கு சங்கடம் இல்லை. 

எனக்கு நீர் ஒரு காரியம் செய்யணும். எனக்கு இதுல பூரண சம்மதங்கறதை அப்துல் காதர் கிட்ட எடுத்துச்சொல்லி நாங்க கூடிய விரைவில் சந்திக்க ஏற்பாடு பண்ணனும். அப்புறம் மேற்கொண்டு ஆக வேண்டியதைப்பார்ப்போம். எனக்காக கூப்ட்ட உடனே வந்ததற்கு மிக்க நன்றி. கூடிய விரைவில் நல்ல சேதியோட அப்துல் காதரோட சந்திப்போம்" என கூறி அவருக்கு விடை கூறி வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.

ஊஞ்சல் ஆடாமல் அசங்காமல் நிசப்தத்தை பரப்பிக்கொண்டிருந்தது.




மறு நாள் சொல்லி வைத்தார் போல் ஐயர் வீட்டிற்கு அப்துல்காதர் மாலை ஆறுமணிக்கு, வாழைப்பழமும், மல்லிகைப்பூவுமாக ஆட்டோரிக்கஷாவில் வந்து இறங்கினார். பக்கத்து வீட்டு பாப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த கோமளம் இவர் வருபவதைப் பார்த்துவிட்டுவாங்கோ, இப்ப வந்துடுவார்என்று சொல்லி பத்தமடை பாய் ஒன்றை விரித்து என்னன்னா, அவர் வந்திருக்கார்என்று கூறிக்கொண்டு உள்ளே சென்றாள். ‘இதோ வந்திட்டேன் என்று தலயை துவட்டியவாரே  அய்யாசாமி ஐயர் வந்தார். ‘வாங்க Bhai, ரொம்ப புழுக்கமா போச்சு அதான் ஒரு குளியலைப் போட்டுட்டு வந்தேன்என்றவாரே அருகிலிருந்த Rallis table Fan ஸ்விட்சை தட்டிவிட்டார். அந்த சமயத்தில் கோமளம் மாமியும் ஆவி பறக்க காபி கொண்டு வந்து அப்துல்காதர் அருகில் வைத்துச் சென்றாள். அவர் சங்கோஜப்பட்டு, ‘இதெல்லாம் எதுக்கும்மா ன்னு கேட்டபடி ஐயரைப் பார்த்தார். “குடிங்க Bhai, மொத மொதலா நம வீட்டுக்கு வர்ரீங்க, இது கூட சாப்பிடலைன்னா எப்பிடிஎன்றார்.

ஜாபர் சொன்னான், நீங்க judge வீட்டுக்கு போயிருந்தீங்கன்னு. ஜாபர் ரொம்ப மன வருத்தத்தை கொடுத்திட்டான். நானும் அவனை வேண்டாம்பா, அவங்கெல்லாம் brahmins, நம்பளை ஏத்துக்க மாட்டாங்க, விட்டுடுன்னு சொன்னேன். அந்தப் பொண்ணும் அவனை ரொம்ப விரும்புது, கட்டினா அவளை தான் கட்டுவேங்கறான். உங்க கிட்ட பேச ரொம்ப தர்ம சங்கடமா இருக்கு, நான் எப்பிடி இத்த போய் JUDGE ஐயா கிட்ட பேசுவேன், ராப் பூரா தூக்கம் இல்லை ஐயா என்று கண்களில் நீர் துளிர்க்க சொல்லி முடித்தார்.

Bhai, மொதல்ல காபி குடிங்க, ஆறிப்போவுது. நேட்றைக்கு judge சொல்லி விட்டார். ஒரு மணிக்கு மேல பேசினோம். Judge நேராவே விஷயத்தக்கு வந்திட்டார். அந்தப் பொண்ணு ரொம்ப தைரியமான பொண்ணு போல. எல்லா விஷயத்தையும் அவங்க கிட்ட சொல்லியிருக்கு. இத மாதிரி என் பொண்ணா இருந்தா கட்டி வைப்பேனான்னு கேட்டார்என் பொண்னுக்கு மனசுக்குப் பிடிச்சுடுத்துன்னா பண்ணிவைப்பேன்னு சொன்னேன். அதுக்கப்புறம் தான் அவாளும் அதே தீர்மானத்துக்கு வந்திருக்காளாம். சரி வாங்க இப்பிடி நடந்துகிட்டே பேசுவோம் என்று சொல்லி நெருப்புப்பெட்டியைத் தேடினார். அந்த சமயத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த பாயின் அடியிலிருந்து Bhai அந்த நெருப்புப்பெட்டியை எடுத்துக்கொடுத்தார்.

Bhai, இப்ப அடுத்த படியா உங்களை judge அவர் வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார். உங்க ஜமா ல என்ன சொல்றாங்க?  “அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல ஐயா. 8 வருஷத்துக்கு முன்னாடி நம்ப மசூதி கட்ட இடம் வாங்கினச்ச ஏகத்துக்கு எதிர்ப்பு இருந்துச்சு. எங்களுக்கு ஆதரவா இந்த ஜட்ஜ் ஐயா தான் தீர்ப்பு கொடுத்தாரு. அந்த நன்னியும் விஸ்வாசமும் எங்க ஆட்களுக்கு எப்பவும் உண்டு ஐயாஅதனால எங்கிட்ட ஜட்ஜுக்கு ஏதும் மன சங்கடமோ வருத்தமோ இல்லாதபடிக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுக்க சொல்லி இருக்காங்க ஐயாநானும் நிச்சயமா அதை நிரைவேத்துவேன்யா”.

அடுத்த வாரம் Bhai அவரது இனத்தவர் சூழ ஜட்ஜ் வீட்டிற்கு வந்தார். பூ, பழங்கள் வழங்கி சம்பிரதாயமாக தன் மகனுக்கு அவர் மகளை மணமுடிக்கக் கோரினார். ஜட்ஜும் அவர் மனைவியும் பூரண சம்மத்த்தை தெரிவித்த பின்னர் எல்லோரும் shamiana  போட்ட பந்தலில் வடை பாயசத்தோடு விருந்துண்டனர். எல்லோர் நடுவிலும் அய்யசாமி ஐயர் வலம் வந்து ஒரு சகஜ நிலமயை உருவாக்கிக் கொடுத்தார்.

அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம் தடபுடலாக நடந்தது. ஜாபரும் ஜலஜாவும் இரண்டு வருடங்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்யக் கிளம்பிவிட்டனர்.

அய்யாசாமி அய்யருக்கு எல்லாம் இனிதே நடந்து முடிந்ததில் பரம திருப்தி. அவர் முன்னின்று நடத்திக் கொடுத்ததில் Bhai  அவரை தெய்வமாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டார். கல்யாணத்தின்போது அப்துல் காதரும் அய்யசாமி ஐயரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட photo அவர் வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ஐயர் அடிக்கடி market போவதில்லை. அவர் உடல் நலம் குன்றும்போதெல்லம் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவரை கவனித்துக்கொள்வதை Bhai ஒரு கடமையாகவேச் செய்தார்.


இந்த முறை ஐயருக்கு இருமல், wheezing   கட்டுக் கடங்காமல் போனதால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கவேண்டியதாய்ப் போயிற்று. சேர்த்துவிட்டுக் கிளம்புகையில் கோமளத்திடம் அம்மா, என்னை உங்க தம்பி மாதிரி நெனச்சு எந்த உதவி வேணா கேளுங்க, அத செய்ய வேண்டியது என் கடமைஎன்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார். அவருக்கு என்னவோ இந்த முறை இந்த உத்திரவாதத்தையும், ஆறுதலையும் அவளுக்கு தர வேண்டியது அவசியம் என உணர்ந்தார் அப்துல் காதர்!