நான் தான் கால்கள்
பேசுகிறேன்!
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் வாயைத்திறக்காமல்(!) என் வேலயைச் செய்து கொண்டிருக்கிறேன். இவனுக்கு வெகு சின்ன வயது முதலே உழைக்க ஆராம்பித்துவிட்டேன்.
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் தெரு. அங்கிருந்து சாமாராவ் உயர் நிலைப் பள்ளிக்குச் செல்வேன். வெகு தூரம் இல்லை. இவனுக்கு அப்போது ஐந்து வயது தான் என்று பார்க்கும்போது அது கொஞ்சம் தூரம் தான். பள்ளிக்குச் சென்றதும் முதலில் வழிபாட்டு அறைக்குச் (Prayer Hall) சென்று நிற்க வேண்டும். சிறிது நேரத்தில் அங்கு சம்பா ("எப்படி இருக்க சம்பா? உன்னை இவன் நெனச்சுக் கூட பாக்கறதில்ல தெரியுமா"?) வந்து பெருமையாக "வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்" என்று கலைமகள் மேல் ஒரு பாடலைப் பாடுவாள். இப்பவா இருந்தா இவனும் அந்தப்பாட்டைக் கேட்டுட்டு விமரிசனம் பண்ணி இவன் பாணில வார்த்தைகளைக் கோளாறு பண்ணி பாடிக்காட்டி இருப்பான். நடுப்பற மதிய உணவுக்குப்பின் ஒரு மணி நேரத்துக்கு ஓடிப்பிடிச்சு வெளயாடறேன் பேர் வழின்னு என்னை இங்கயும் அங்கயும் ஓட விடுவான். அப்பல்லாம் எனக்கு வலுவும் தெம்பும் இருந்தது. நானும் இணைந்து கொடுத்தேன். ஒரு நாலு மணி ஆச்சுன்னா பையைத் தூக்கிண்டு - நல்ல காலம் அப்பல்லாம் இப்ப இருக்கறா மாதிரி முதுகுப்பை ((backpack) பூரா புத்தகங்கள் கிடையாது - இவனோட "பவானி ஜுவல்லரி" பைல ஒரு கரும்பலகை, ஒடஞ்சு போன பலப்ப குச்சி, ஒல்லியா ஒரு தமிழ் புத்தகம், அதிரசம் மாதிரி பிஞ்சு போன ஒரு 1+1= 2 ன்னு போட்ட கணக்கு புத்தகம். இதையெல்லாம் தூக்கிண்டு விறுவிறுன்னு கண்மண் தெரியாம ஓடவிடுவான். அந்த தெரு மொனைல எதுக்காகவோ ஒரு பெரிய சரிவு கட்டி இருக்கும். அங்க வந்த ஒடனெ இவனுக்கு ஒருநாளைப்போல அவசரமா ஓண்ணுக்கு இருக்க வந்துடும். மட மடன்னு பையை தோளுக்கு ஏத்திண்டு யார் வரா, போறான்னு பாக்காம காலுரையின் பித்தான்களை கழட்டி விட்டுட்டு அந்த சரிவுக்கு மேல ஒட்டி இருக்கற திரைப்பட போஸ்டர்களைத் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருப்பான். அந்தச் சரிவிலிருந்து பெருக்கெடுத்து வேகமாய் ஒடிவரும் சிறுநீர் என் மேல் படாமல் இருக்கு முடிந்த வரையில் ஒதுங்கிப் பார்ப்பேன். வீட்டிற்குச்சென்றதும் கொல்லைப்பக்கம் சென்று கிணற்றைச் சுற்றி ஓடுதல், மாமரத்தில் ஏறுதல் முதிலியவற்றில் ஈடுபடுத்துவான். ஏதெனும் ஒரு சமயம் இவனுடைய தந்தையுடன் திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருக்கும் அத்தை வீட்டிற்குச் சென்றது உண்டு. அதுதான் நான் முதல் முதலாக சென்ற 'தொலை தூரம்.
அடுத்தது இவன் வீடு மைலாப்பூரில் ஒரு குறுகிய தெருவில் அமைந்தது. அந்தத்தெருவில் ஒரு குறுகலான சந்துபோல் இருக்கும். அந்த சந்தில் ஒரே சமயத்தில் ஒல்லியான ஆட்கள் ஒன்றரை பேருக்குமேல் நுழைய முடியாது! (அந்த வீட்டுச் சொந்தக்காரர் சற்று பருமனான ஆள். மாதா மாதம் வாடகை கொடுக்க தாமதம் ஆனவுடன் இவனுடைய அப்பாவிடம் கோபமாகப்பேசிவிட்டுப்போவார். அதனால் இவனும் இவனுடைய அக்காக்களுமாக கோபத்தில் அவரை "குண்டன்" என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்). அந்த குறுக்குச் சந்தில் என்னை வேகமாக ஓடவிடுவான். ஐந்தாம் வகுப்பு வரை தெற்கு மாட வீதியில் "ராஜ ராஜேஸ்வரி பள்ளிக்கூடம் என்ற பள்ளிக்கூடத்தில் பயின்றான். இந்த பள்ளிக்கூடம் இவன் வீட்டிலிருந்து அரை மைல் இருக்கும். சளைக்க மாட்டான். இதைத்தவிர மைதிலி டீச்சரின் மதிய உணவை அவர் வீட்டிற்குச் சென்று எடுத்து வருவதில் இவனுக்கும் இவன் நண்பன் திருநாவுக்கரசுக்கும் எப்போதும் போட்டி. இவனுக்கு அப்படி ஏவல் புரிவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனால் திருநாவுக்கரசு எப்போதும் வகுப்பில் முன்னணியில்(First Rank) இருந்து வந்தான். இவன் எண்ணம் என்னவென்றால் அவன் மைதிலி டீச்சருக்கு ஏவல் பண்ணுவதால் தான் அவனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கிறது என கணக்கு போட்டான். சரியாக பள்ளிக் கணக்கைப் போட்டிருந்தால் மைதிலி டீச்சர் வீட்டு நடை மிச்சமாகி இருக்கும். திருநாவுக்கரசு(இனிமேல் 'திரு') வீடு பக்கத்து தெருவில் இருந்தது. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டில் பையை வைத்துவிட்டு கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு அடுத்த தெருவுக்கு ஒட வைப்பான். திரு வின் அம்மா மிகவும் குண்டு. பேசவே திணருவார்கள். திருவிடம் வெகு பிரியம். இவனுக்கும் திருவிற்கும் தண்ணியாக ஆறிப்போன ஏடுபடிந்த காபி கொடுப்பார்கள். அது என்னமோ அந்த காபி அடுப்புலய Freshஆ ஆரிப்போய் போட்டாமாதிரி இருக்குமாம்! அதை ஒரே மடக்கில் குடித்துவிடுவான். அந்த வீட்டில் எனக்கு ஓய்வுதான். திரு ஒவ்வொரு நாளும் சிவலிங்க பூஜை பண்ணுவான். அதற்கு இவன் எடுபிடி. அவன் சொல்லும்போது தண்ணிவிடுவது, சந்தனம் அறைப்பது, குங்குமம் குழைத்துக்கொடுப்பது - இவை எல்லாம் இவன் வேலை. ஆனால் திருவிற்குத்தான் அந்த சந்தனம் குங்குமத்தை சிவலிங்கத்திற்கு வைப்பதற்கு உரிமை. இதுவும் திரு First Rank வாங்குவதற்கு முக்கிய காரணம் என்று இவன் தீர்க்கமாக நம்பினான். இந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இவனுடைய அப்பாவை ஒரு நாளைப்போல் "எனக்கு ஒரு சிவலிங்கம் வேணும்" னு நச்சரிக்க ஆரம்பித்தான். அவருக்கு இறை நம்பிக்கை உண்டே ஒழிய பூஜை புனஸ்காரத்தில் எல்லாம் நாட்டம் கிடையாது. ஆகவே இவன் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை அவரும் இவனுக்கு சிவலிங்கம் வாங்கித்தரவில்லை இவனும் 20 பேர் படிக்கும் வகுப்பில் 8th Rank ற்கு கீழயே வாங்கிக்கொண்டிருந்தான்.
ஆறாம் வகுப்பு பென்னாத்துர் சுப்ரமணியம் ஐயர் உயர் நிலைப்பள்ளி (P.S. High School) admission ற்கு ஏக கெடுபிடி ஆகி விட்டது. இவன் நெனச்சான், "அப்பா அந்த சிவலிங்கத்தை வாங்கிக்குடுத்திருந்தார்னா நானும் நல்ல Rank வாங்கி இப்போ சிபாரிசுக்குப் போய் நிக்க வேண்டாமோல்யோ". எப்படியோ இவனோட அப்பாவுக்கு அந்த ஸ்கூல் மேற் பார்வையாளர் கோதண்டராம ஐயங்கார் ரொம்ப பழக்கம்ங்கறதால இவன் அந்த பள்ளிக்கூடத்துல சேர முடிஞ்சது! திடீர்னு ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்து விட்டு அவனோட அப்பாகிட்ட ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்!
தொடரும்...
No comments:
Post a Comment